சென்னை: தமிழ்நாடு அரசும், காவல்துறையும் குண்டாஸ் சட்டத்தை எப்படி சாதாரணமாக பயன்படுத்துகிறது என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதி மன்றம் தமிழ்நாடு அரசை மீண்டும் கண்டித்துள்ளது. ஏற்கனவே சவுக்கு வழக்கில் காவல்துறையை கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்றம் தற்போது மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
சமீப காலமாக அரசை எதிர்த்து பேசுபவர்களை கைது செய்யும் காவல்துறை, பலரை குண்டாசில் உள்ளே போடுகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் காவல்துறையின் குண்டாசை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து வருவதுடன், காவல்துறை அதிகாரிகள் போடும் குண்டாசை ரத்து செய்தும் வருகிறது. இது வாடிக்கையாக உள்ளது. இருந்தாலும் தமிழ்நாடு காவல்துறை குற்றவாளிகளை குண்டாசில் கைது செய்வதை பெருமையாக கூறி வருகிறது.
சமீபத்தில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்த நிலையில், அவர்மீது மீண்டும் வேறறொரு வழக்கில் குண்டாசில் கைது செய்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதற்கு பல எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தனர்.
இந்த நிலையில் நிதிமோசடி காரணமாக கைது செய்ய ஒருவர்மீது குண்டாஸ் போடப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், அரசின் குண்டாஸ் உத்தரவை ரத்து செய்ததுடன் காவல்துறையினரையும், தமிழ்நாடு அரசையும் கடுமையாக விமர்சித்தது.
குண்டாஸ் சட்டம் விதிகளை செயல்படுத்தியதற்காக, மீண்டும் மாநில அரசு மீது கடும் கண்டனத்தை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிகாரிகள் அதை சாதாரணமாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் நீதிபதி வி.சிவஞானம் அடங்கிய அமர்வு, ஒரு நபரை ஒரு நாள் கூட சட்டவிரோதமாக காவலில் வைப்பது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியதை சுட்டிக்காட்டி, தனிநபர்களை தடுப்புக் காவலில் வைப்பது குறித்து தீவிரமாக சிந்திக்குமாறு அரசை கேட்டுக் கொண்டது.
நீதிபதிகளின் கடுமையான கேள்விகளை எதிர்கொண்ட கூடுதல் அரசு வழக்கறிஞர் ராஜ் திலக், செல்வராஜ் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் தனிநபர்களுக்கு எதிரான தடுப்புக் காவலை சாதாரணமாக பயன்படுத்தியதற்காக அரசுக்கு எதிராக கடும் கண்டனத்தை தெரிவித்தது.
இந்த வழக்கின் மனுதாரர், செல்வராஜ், 3 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்றதாகவும், போலி சம்பள சீட்டு மூலம் பல வங்கிக் கணக்குகளை தொடங்கி தனது கிரெடிட் கார்டில் ரூ.33 லட்சம் பில் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடத்து, அவரை காவல்தறையினர் தடுப்புக் காவல் சட்டம், 1982-ன் கீழ் (குண்டாஸ்) அவர் கைது செய்தது. இதற்கு எதிரான அவரது மனுவை விசாரித்த அமர்வு, தனிநபர்கள் தொடர்பான குற்றங்கள் சட்டத்தின் வரம்பிற்குள் வராது என்று கூறியதுன், ஏனெனில் அவரது நடவடிக்கை பொது மக்களுக்கு எந்த இடையூறு அல்லது பொது ஒழுங்கை மீறவில்லை.
மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக இருக்காது, நிதி மோசடிகள் போன்ற குற்றங்களுக்காக ஒரு தனிநபருக்கு எதிராக அரசு எப்படி குண்டாஸ் சட்டத்தை செயல்படுத்தியது என்று ஆச்சரியமாக இருக்கிறது. தடுப்புக்காவல் சட்டத்தின் விதிகளை செயல்படுத்துவது பற்றி மாநிலம் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று அமர்வு மேலும் கூறியது.
முன்னதாக சவுக்கு சங்கர் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், தடுப்புக் காவலைப் பயன்படுத்தும் ஜனநாயக அரசு நாட்டை மீண்டும் காலனித்துவ காலத்திற்கு அழைத்துச் செல்லும். பொது ஒழுங்கு அல்லது மாநிலத்தின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படாத பேச்சுக்களைத் தடுக்க தடுப்புக் காவல் சட்டங்களைப் பயன்படுத்த முடியாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.