வினேஷ் போகத்தின் மேல் முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தது.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தனது எடை பிரிவை விட 100 கிராம் கூடுதலாக இருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஒலிம்பிக் கமிட்டி எடுத்த இந்த நடவடிக்கையால் இந்திய ரசிகர்கள் கொந்தளித்தனர். இதனையடுத்து ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் அழுத்தம் தரவேண்டும் என்று சங்கத் தலைவர் பி.டி. உஷா-வை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அதேவேளையில், வினேஷ் போகத்தின் உடல் எடையை நிர்வகிக்க வேண்டியது அவரது பயிற்சியாளர் மற்றும் அவரது உதவியாளர்களின் பொறுப்பு என்று பி.டி. உஷா கருத்து தெரிவித்திருந்தார்.
இருந்தபோதும், சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் இந்தியாவின் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதை விசாரித்த நடுவர் மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது, அதில் வினேஷ் போகத்துக்கு ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வழங்கமுடியாது என்றும் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.