டெல்லி: தமிழ்நாட்டில் 14, 15ந்தேதி மிக கனமழைக்கான வாய்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது .

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட  தமிழகத்தில் பல பகுதிகளில்  இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதற்கேற்ப தமிழகத்தின் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஆக – 12, 13ல்) கனமழை பெய்யும் எனவும் , 7 – 11 செமீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு  இருப்பதாகவும் 14, 15ந்தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,  இந்த இரு நாட்களிலும் 12 – 20 செமீ மழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக வெளியான   இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “  வருகின்ற 14, 15 ம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கிழக்கு  ராஜஸ்தான், பீகார், அசாம், மேகாலயா புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் மாஹெ ஆகிய மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும்.

வடமேற்கு இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட். இமாச்சலப் பிரதேசம் மற்றும் கிழக்கு  ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 12 முதல் 17 ம் தேதி வரை கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் சண்டிகர் மற்றும் அரியானாவில் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 15ம்  தேதி வரை மழை பெய்யும்  என்று எதிர்பாக்கப்படுகிறது. இன்று கிழக்கு ராஜஸ்தான் மீது அதிக தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.