காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிாியை பாவ்னாபென் படேல் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றாமலே சம்பளம் பெற்று வந்துள்ளார். சர்ச்சைக்குரிய இந்த ஆசிரியை அமெரிக்காவில் வசித்து வருவது தெரிய வந்துள்ளது. மேலும், இவர் அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதான் குஜராத் மாடல் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆசிரியை அமெரிக்காவில் 8 ஆண்டுகளாக வசித்து வந்த நிலையில், தொடந்து குஜராத் பள்ளியில் பணியாற்றியதாக கூறி சம்பளம் வாங்கி வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் சம்பளம் தொடர்பான பதிவேடுகளும் வெளியாகி உள்ளன. அவர் பணியில் இல்லாத போதிலும், பள்ளியின் ஊதியத்தில் பட்டியலிடப்பட்டு வந்துள்ளார்.
குறிப்பட்ட ஆசிரியையான பாவ்னாபென் படேல் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இந்த பள்ளியில் பணியாற்றி வருவதாகவும், வருடத்திற்கு ஒருமுறை தீபாவளியின் போது குஜராத் வருவார் ஆனால் பள்ளி அல்லது மாணவர்களுடன் ஈடுபடுவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றாமலே சம்பளம் பெற்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் பருல் மேத்தா , மாவட்ட கல்வி அலுவலருக்கு கடிதம் எழுதி, “இந்த ஆசிரியர், 2016-ஆம் ஆண்டே வெளிநாட்டில் ‘செட்டில்’ ஆகிவிட்டார்,” என்று தெரிவித்தார். “பள்ளிப் பதிவேட்டின்படி, கடந்த எட்டு ஆண்டுகளாக அவர் வெளிநாட்டில் இருந்துகொண்டு, ஆண்டுக்கு ஒருமாதம் மட்டும் கணக்குக்காகப் பள்ளிக்கு வந்திருக்கிறார்,” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “தீபாவளி விடுமுறை மற்றும் விடுமுறை நாட்களை ஏற்பாடு செய்து இரண்டு மாத சம்பளத்தை யும் வாங்கியிருக்கிறார்,” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பள்ளிப் பதிவேட்டில் பாவ்னாபென் படேலின் பெயருக்கு எதிராக ‘குறைக்கப்பட்ட ஊதியத்துடன் விடுப்பு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக அந்த பெண் ஆசிரியை பணியாற்றி வந்த ஸ்ரீ பஞ்சா தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பருல் மேத்தா, ஆசிரியை பவ்னாபென் படேலைப் பற்றிச் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஸ்ரீ பஞ்சா தொடக்கப் பள்ளி பழங்குடியினர் பகுதியில் உள்ள பள்ளி. இந்தப் பள்ளிக்கு நான் வந்து கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. இந்தப் பள்ளியில் பவ்னாபென் படேல் என்ற ஆசிரியர் இருக்கிறார். தற்போது அவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார்,, அவர் வருடத்துக்கு ஒரு மாதம் மட்டும் இங்கு வருவார். தனது ஆசிரியர் பணிக்காக ஒரு மாதம் இருந்துவிட்டுப் பிறகு சென்று விடுவார். இது பல வருடங்களாக நடந்து வருகிறது என்றவர், அந்த ஆசிரியர் பள்ளிக்கு வர வேண்டும், அல்லது பணி விலக வேண்டும், எனக் கூறினார். மேலும் அவர், அந்த ஆசிரியர் பாவ்னா படேல் 2027-இல் ஓய்வு பெறப் போவதாகத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த குஜராத் மாநில அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அங்கு விசாரணை நடத்திய, முதன்மை கல்வி அதிகாரி வினு படேல் பள்ளி தலைமை ஆசிரியை கூறியதை மறுத்துள்ளார். “பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் பருல் மேத்தா ஊடகங்களிடம் தவறான தகவல் அளித்துள்ளார். இந்த அங்கீகரிக்கப்படாத விடுப்பின் போது அந்த ஆசிரியருக்குச் சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. பள்ளியின் தலைமை ஆசிரியரோ, துணை தலைமை ஆசிரியரோ இந்த விஷயத்தைத் தாலுகா அளவில் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்கள் ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு, மாவட்ட அளவில் தெரிவித்துள்ளனர் என்ற குற்றம் சாட்டினார். மேலும், இதுகுறித்து விசாரணை நிர்வாகத் துறையின் 2005 தீர்மானத்தின்படி ஆசிரியர் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் அந்த ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளம் திரும்ப பெறப்படும் என்றும் மாவட்டக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து கூறிய குஜராத் கல்வி அமைச்சர் குபேர் திண்டோர், “வெளிநாட்டில் இருந்தபடி, இங்கே பணியில் தொடர்வது மிகவும் தீவிரமான விஷயம். தற்போது, ஆசிரியர் ஒருவர் அப்படிச் செய்தது பற்றி கவனத்திற்கு வந்துள்ளது. அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றவர், இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தில் வேற எங்காவது நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றவர், “இனி குஜராத் முழுவதும் பிரசாரம் செய்து இதுபோன்ற ஆசிரியர்களை திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுப்போம்,” என்றார்