டெல்லி:  பிரதமர் மோடி விவசாயிகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க, மற்றும் வருமானத்தை பெருக்கும் வகையில்,  காலநிலை தாங்கும் கரும்பு, பருத்தி உள்ளிட்ட 109 பயிர் ரகங்களின் விதை வகைகளை வெளியிட்டார். தொடர்ந்து, விவசாயிகளை சந்தித்து உரையாடினார்.

தலைநகர் டெல்லியில்  உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (August 11)  வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்தப் புதிய பயிர் வகைகளின் முக்கியத்துவம் குறித்து விவாதித்த பிரதமர், வேளாண்மையில் மதிப்புக் கூட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விவாதித்த பிரதமர், மக்கள் எவ்வாறு சத்தான உணவை நோக்கி நகர்கிறார்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்தும், இயற்கை விவசாயத்தின் மீது சாமானிய மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவது குறித்தும் பேசினார்

அப்போது, இந்தப் புதிய ரகங்கள் அதிக நன்மை பயக்கும் என்றும், அவை தங்கள் செலவைக் குறைக்க உதவும் என்றும், சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களுடன் பேசிய பிரதமர் மோடி,  ஒவ்வொரு மாதமும் உருவாக்கப்படும் புதிய இரகங்களின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அறிவியல் நிலையங்கள் முன்கூட்டியே எடுத்துரைத்து அவற்றின் பலன்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இந்தப் புதிய பயிர் வகைகளை உருவாக்கியதற்காக விஞ்ஞானிகளையும் பிரதமர் பாராட்டினார். பயன்படுத்தப்படாத பயிர்களை பிரதான பயன்பாட்டுக்கு கொண்டு வர பிரதமர் அளித்த ஆலோசனைக்கு ஏற்ப தாங்கள் செயல்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பிரதமர் வெளியிட்ட பயிர் ரகங்களில்  வயல் பயிர்கள் மற்றும்  தோட்டக்கலை பயிர்கள் அடங்கும். வயல் பயிர்களில், சிறுதானியங்கள், தீவனப் பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி, நார்ச்சத்து பயிர்கள்  மற்றும் பிற சாத்தியமான பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு தானியங்களின் விதைகள் வெளியிடப்பட்டன.

தோட்டக்கலைப் பயிர்களில், பல்வேறு வகையான பழங்கள், காய்கறி பயிர்கள், தோட்டப் பயிர்கள், கிழங்கு பயிர்கள், மசாலாப் பொருட்கள், பூக்கள் மற்றும் மூலிகைப் பயிர்கள் வெளியிடப்பட்டன.