சென்னை: சென்னையில் நடைபெற உள்ள ‘எப் 4 கார் ரேஸ்’க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பார்முலா4 கார் ரேசை நடத்துவதில் தமிழநாடு அரசு உறுதியாக உள்ளது. இந்த மாதம் (ஆகஸ்டு( 31 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பும் வரவேற்பும் எழுந்துள்ளது. சில அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கார் ரேசுக்கான சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால், இவ்வளவு செலவு செய்து கார் பந்தயம் நடத்துவதால் யாருக்கு என்ன லாபம் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருங்காட்டு கோட்டையில் கார் ரேஸ் மைதானம் உள்ள நிலையில், அதை விடுத்து சென்னையின் மையப்பகுதியில் போட்டிகள் நடத்துவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
அரசின் இந்த முடிவுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர் எடப்பாடி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அதிமுக சார்பில் க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தி உள்ளது.
சென்னையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தனியார் அமைப்புடன் 3 ஆண்டுகளுக்கு சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்காக கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆனால் கடந்த ஆண்டு வழக்குகள் மற்றும் புயல் பாதிப்புகள் காரணமாக, கார் ரேஸ் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நடப்பாண்டு மீண்டும் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே வரும் ஆகஸ்டு 31 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி பார்முலா 4 பந்தயம் நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மையப்பகுதியான அண்ணா சாலையில் இரவு நேரத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் துவங்கி 3.5 கி.மீ., துாரத்தைக் கடந்து, மீண்டும் தீவுத்திடலை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த துாரத்திற்குள், 19 திருப்பங்கள், பல்வேறு இரட்டை வளைவுகள், திடீர் உயரங்கள் உள்ளிட்டவற்றைக் கடந்து வர வேண்டும். 230 முதல் 250 கி.மீ., வரையிலான வேகத்தில் கார்கள் போட்டியிடும். இதற்கான டிக்கெட் கட்டணங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.