ஜப்பானின் க்யூஷு அருகே நேற்று 7.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜப்பானின் தெற்கு கடல் பகுதியில் உள்ள கடல் பள்ளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஜப்பான் வானிலை முகமை (JMA) எச்சரித்துள்ளது.

நங்காய் கடல் பள்ளம் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி ஜப்பானுக்கு தெற்கே சுமார் 900 கி.மீ. நீண்டு இருக்கிறது.

இதற்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது இதுபோன்ற எச்சரிக்கை எதையும் விடுத்திராத JMA முதல்முறையாக தற்போது நங்காய் கடல் பள்ளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும் தவிர மோசமான பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல தயாராக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

ஒரு வார காலத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் இது நிகழலாம் என்று கூறியுள்ள JMA தாங்கள் குறித்துள்ள காலத்திற்குப் பிறகும் நிலநடுக்கம் நிகழ வாய்ப்பிருப்பதாக பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய நிலநடுக்கங்கள் தோராயமாக 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கின்றன, ஆனால் சரியான நேரத்தை கணிக்க முடியாது. மிக சமீபத்தியது டிசம்பர் 21, 1946 இல் நடந்தது, இது ரிக்டரில் 8.1 மற்றும் 8.4 க்கு இடையில் அளவிடப்பட்டது.

நான்காய் பள்ளத்தாக்கில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால், கான்டோ பகுதியிலிருந்து கியூஷு வரையிலான பரந்த பகுதியில் கடுமையான நடுக்கம் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கான்டோ பகுதியிலிருந்து ஒகினாவா வரை பசிபிக் கடற்கரையில் அதிக சுனாமி அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. .

ஜப்பான் வானிலை முகமையின் இந்த அறிவுறுத்தலை அடுத்து அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் நிலநடுக்கம் ஏற்படும் போது தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.