டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுபோல எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாரீஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் எறிந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதில், இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் எறிந்து இரண்டாவதுஇடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி பெறும் முதல் வெள்ளிப் பதக்கமாகும். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5-ஆக உயர்த்துள்ளது.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம், நடப்பு ஒலிம்பிக்கில் வெள்ளி என அடுத்தடுத்த பதக்கங்களைப் பெற்றுத் தந்த நீரஜ் சோப்ராவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், , “நீரஜ் சோப்ரா ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர். மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு அவர் ஊக்கமாக இருப்பார். அவரால் தேசம் பெருமை கொள்கிறது” என பதிவிட்டுள்ளார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், “நீரஜ் சோப்ரா தொடர்ந்து 2வது முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளார். இந்த நம்பமுடியாத வரலாற்றுச் சாதனை சுதந்திர இந்தியாவில் இதுவரை எந்த ஒரு தனிநபரும் இதைச் செய்ததில்லை” என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.யும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ்தள வாழ்த்துச் செய்தியில், , “நீரஜ், நீங்கள் ஒரு அற்புதமான விளையாட்டு வீரர். #ParisOlympics2024 முழுவதும் அற்புதமான செயல்பாட்டிற்குப் பிறகு உங்கள் வெள்ளிப் பதக்கத்திற்கு வாழ்த்துகள். நீங்கள் மீண்டும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.
நீரஜ், நீங்கள் ஒரு அற்புதமான தடகள வீரர் நீங்கள் இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே உள்பட அரசியல்கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.