இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் கடந்த வாரம் 3 சிறுமிகள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.

சிறுமிகளை கொலை செய்த நபர் குறித்து சமூக வலைதளத்தில் வெளியான வதந்தியை அடுத்து இனக்கலவரமாக பரவியது.

இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வேல்ஸில் பிறந்த 17 வயது ஆக்செல் ருடகுபனா என தெரியவந்தது. அவரது பெற்றோர் ருவாண்டா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.

இதனால் கலவரக்காரர்கள் வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தவர்களை தாக்கத் துவங்கியதால் கலவரம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இங்கிலாந்தில் நிகழ்ந்துள்ள இந்த வன்முறை வெறியாட்டத்தை அடுத்து அங்குள்ள இந்தியர்கள் கவனமாக இருக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியது.

இந்த நிலையில் இன்றிரவு 30 க்கும் மேற்பட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட போராட்டங்களை தீவிர வலதுசாரிகள் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதனால் பல நகரங்களில் பணியாளர்கள் அலுவலகத்தை விட்டு சீக்கிரமே வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் மருத்துவமனை ஊழியர்களும் பணியில் இருந்து வீடு திரும்புவதாகக் கூறப்படுகிறது.

தவிர, காமன்ஸ் சபாநாயகரான சர் லிண்ட்சே ஹோய்ல், ஆர்ப்பாட்டக்காரர்களால் குறிவைக்கப்படலாம் என்று அஞ்சினால், காவல்துறையினரின் பாதுகாப்புடன் எம்.பி.க்கள் தங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளார்.