உலகெங்கும் பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது, இந்திய பங்குச் சந்தை இன்று ஒரே நாளில் ரூ. 10 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது.

ஜப்பான் நாட்டின் நாணயமான யென் மதிப்பு குறைந்ததை அடுத்தே பங்கு வர்த்தகத்தில் உலகம் முழுக்க வீழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு அமெரிக்க டாலருக்கு 160 யென் என்று இருந்த நிலை மாறி தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு 143 யென் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரித்து வந்த போதிலும் பாங்க் ஆப் ஜப்பான் தனது வட்டி விதிதத்தை பல ஆண்டுகளாக உயர்த்தாமல் இருந்தது.

இதனால் யென் கேரி டிரேட் (Yen carry trade), வங்கிகளில் யென் கடனாக வாங்கி அதை டாலராக மாற்றி பங்குகளில் முதலீடு செய்வது அதிகரித்தது.

இந்த நிலையில் பேங்க் ஆப் ஜப்பான் தனது வட்டி விகிதத்தை 2007ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது.

~0.25% சதவீதம் அளவு உயர்த்தப்பட்டதை அடுத்து இந்த உயர்வு தற்போது உலகம் முழுவதும் பங்கு வர்த்தகத்தில் எதிரொலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

திடீரென்று, யென் கடன்களின் சகாப்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து பங்கு வர்த்தகம் படு வீழ்ச்சி அடைந்து வருகிறது.

முந்தைய சந்தை சரிவை விட இது முற்றிலும் மாறுபட்ட நிலையாக இருப்பதை அடுத்து இப்போதைக்கு, பங்கு வர்த்தகத்தில் நிலையற்ற தன்மை நீடிக்கும் என்று பங்கு வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.