திருவனந்தபுரம்

காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம் பி யுமான சசிதரூரின் எக்ஸ் தள பதிவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கடந்த 30 ஆம் தேதி கேரளாவின் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் மண்ணில் புதையுண்டும், ஆற்று வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 359 பேர் பலியாகியுள்ளனர். வயநாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்கள் அனுப்பி வருகிறார்கள்.

அதன்படி நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.பாய், தலையணை உள்ளிட்ட பொருட்களை வழங்கும் வீடியோவை எக்ஸ் சமூக வலைதளத்தில் சசி தரூர் பகிர்ந்து இருந்தார். அந்த பதிவில், ‘வயநாட்டில் மறக்க முடியாத நாளின் சில நினைவுகள்” என சசி தரூர் கூறியிருந்தார்.

இந்தப் பதிவுக்கு கருத்து தெரிவித்த எக்ஸ் தள பயனர் ஒருவர், “உயிரிழப்புகளும் சோகங்களும் நிலவுகிற பகுதியில், மறக்கமுடியாத நினைவுகள் என்று குறிப்பிடுவது கண்டிக்கத்தக்கது’’ என்று தெரிவித்திருந்தார். மற்றொருவர், ”சோகத்தால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு ஒரு மறக்கமுடியாத நாளைக் கொண்டாடச் சென்றாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வேறொருவர் ”உண்மையில் உதவுவதைவிட அதைப் பற்றி இடுகையிடுவதுதான் மிகவும் முக்கியமானது. தன்னலமற்ற சேவையை விட செல்ஃபிக்களுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.

இது போல மோசமான பாதிப்பு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவத்தை, ‘மறக்க முடியாத நாள்’ என்று சசி தரூர் குறிப்பிட்டதற்கு, கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

எனவே தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள சசி தரூர், மறக்க முடியாதது என்பது நினைவில் கொள்ளத்தக்கது அல்லது நினைவில் கொள்ளக் கூடிய ஒன்று என்ற பொருளில் சொன்னேன்” என பதிவிட்டுள்ளார்.