காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிடையே மிகப்பெரிய போராக உருவாகும் பதற்றம் அதிரித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு ஈரான் எந்தநேரத்திலும் பதிலடி கொடுக்கும் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்க இராணுவம் கூடுதல் ஜெட் போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலையை கண்டித்து லெபனான், ஏமன் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

ஹனியே உடல் கத்தாரில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவ்ருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த ஏப்ரல் மாதம் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் ஈரான் ராணுவத்தினர் பலர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுத்த ஈரான் இஸ்ரேலில் உள்ள ராணுவ நிலைகள் மீது 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதன் மூலம் ஈரான் மீதான தாக்குதலுக்கு பதிலடி கிடைக்கும் என்பதை இஸ்ரேலுக்கு தெளிவுபடுத்தியது.

இதனைத் தொடர்ந்து ஈரான் ஆதரவு தீவிரவாத இயக்கங்களான ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்றவை இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு நிச்சயம் பதிலடி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது போல் ஈரானும் இஸ்ரேலில் உள்ள ராணுவ நிலைகளைத் தவிர பொதுமக்கள் வாழும் இடங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இருந்தபோதும் காஸாவில் எஞ்சியிருக்கும் பாலஸ்தீனியர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத சூழலை இது ஏற்படுத்தக்கூடும் என்பதால் ஈரான் இதுபோன்ற முயற்சியில் இறங்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதேவேளையில், போர் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறிக்கொண்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக கூடுதல் போர் கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை அனுப்பப்போவதாகக் கூறியுள்ளது இந்தப் பகுதியில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.