சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன்  நேற்று [ஜூலை 30] அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த  நிலையில்,   அவருக்கு நரம்பியல் பிரச்சனை காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து அவரை  ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-ம் சென்னையில் உள்ள அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  முழு உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கமாக  2 மாதங்களுக்கு ஒரு முறை அப்பல்லோவில் ராமதாஸ் உடல் பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். அதன்படி, இன்றும்  ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பரிசோதனைகளுக்காக  ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமதாஸ் மருத்துவமனையில் வெளியானதை அடுத்து, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  பரிசோதனைகள் முடிந்தவுடன் ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து சென்று விடுவார் என்று பா.ம.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.