சேலம்: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் நீர் வரத்து அதிகமாகி உள்ளதால்,. மேட்டூர் அணை தனது முழு கொள்ளவான 120 அடியை மீண்டும் எட்டி உள்ளது. இதையடுத்து, பாசனத்தக்கு நீர் திறந்து விடப்படும் அளவு அதிகரிக்கப்பட்டு  உள்ளது.

மேட்டூர் அணை அணை  43-வது ஆண்டாக தற்போது மீண்டும் முழு கொள்ளவை எட்டி உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 124 அடி ஆகும்.  ஆனால் பாதுகாப்பு கருதி 120 அடி வந்ததும்,  அணையில் இருந்து நீர் திறந்து விடப்படுவது வழங்கமாக உள்ளது. பொதுவாக  பாசனத்துக்காக  அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி  தண்ணீர் திறப்பது வழக்கம்.  ஆனால், இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது தாமதமானது.  ஆனால், தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடக மாநிலங்களில் நல்ல மழை பெய்து, அங்குள்ள அணைகள் நிரம்பியதால், உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமானது.  இதனால் மேட்டூர் அணை மளமளவென நிரம்பியது.

நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 118.41 அடியாக உயர்ந்ததால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதனிடையே அணையில் இருந்து கடந்த 28-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், காவிரியில் நீர் வரத்து மேலும் அதிகரித்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் நேற்று  மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 119.43 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 54 ஆயிரத்து 459 கனஅடியாகவும் இருந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 69 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில் 43-வது ஆண்டாக நீர்மட்டம் 120 அடியை எட்டி அணை நிரம்பியது.

இதையடுத்து அணையின் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 46 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. அணையின் கரையோர பகுதிகளில் இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,25,500 கனஅடியாக உள்ள நிலையில் அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 21,500 கன அடி, 16 கண் மதகு வழியாக 1,03,500 கன அடி, கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 500 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.

 இன்று காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் பிரிந்தா தேவி, சேலம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் முன்னிலையில், திப்பம்பட்டியில் உள்ள நீரேற்றும் நிலையம் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர் அனைத்தும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. அவ்வாறாக வெளியேற்றப்படும் நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளில் சேமித்து பயன்படுத்த வேண்டும் என ரூ.673 கோடி செலவில் முதல்கட்டமாக 100 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. இதில் 56 ஏரிகள் தயார் நிலையில் உள்ளது.

முதற்கட்டமாக எம்.காளிபட்டியில் உள்ள ஏரியில் நீர் நிரம்பி அதன் பின்னர் படிப்படியாக 56 ஏரிகளுக்கும் இந்த தண்ணீர் செல்லவுள்ளது. இந்த திட்டத்தின் காரணமாக எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் வசிக்க கூடிய பல்லாயிரகனக்கான விவசாயிகள் பயனடையவுள்ளனர். அதன் அடிப்படையில் இன்று காலை 7 மணிக்கு திப்பம்பட்டியில் உள்ள நீரேற்று நிலையம் மூலம் வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.