சேலம்: காவிரியில் நீர் வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 52 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், அணையின் நீர் மட்டம 116 அடியை தாண்டி உள்ளது. இதனால், ஓரிரு நாளில் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.52 லட்சம் கனஅடியில் இருந்து 1.55 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 116.36 அடியை தாண்டியுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 12,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.  தற்போதைய நிலையில், நீர் இருப்பு 87.78 டிஎம்சியாக உள்ளது.  நீர்வரத்தானது தொடர்ந்து இதே அளவில் வந்து கொண்டிருந்தாலும், அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் அளவு 2 நாட்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீடித்தாலும் மேட்டூர் அணை ஓரிரு நாளில்  நிரம்பலாம் என்று நீர்வளத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம்  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு உள்பட மேற்கு  தொடர்ச்சி மலை போன்ற  பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அணையின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் வழியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 111.20 அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 52 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்வரத்து 1.52 லட்சம் கனஅடியில் இருந்து 1.55 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமகா  மேட்டூர் அணை இன்று அல்லது நாளை  நிரம்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.