சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்டு 1ந்தேதி முதல் பிளஸ்2 தேர்வின் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 5ந்தேதி வெளியான நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு, தற்போதுதான் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவி கள் எழுதினர். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே மாதம் 5ந்தேதி காலை 9.30 மணிக்கு வெளியானது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, இணையவழி மதிப்பெண் சான்றிதழ்களைக்கொண்டு கல்லூரிகள் மற்றும் மேற்படிப்புகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி உயர்கல்வியில் ஏராளமானோர் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மார்ச் 2024ல் பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 01.08.2024 அன்று முதல் வழங்கப்படும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 1 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Mark Certificates) / மதிப்பெண் பட்டியலினைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், மேல்நிலை முதலாம் ஆண்டு (600 மதிப்பெண்கள்) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark Certificates) தனித்தனியே வழங்கப்படும்.
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விலோ / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு, அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக (Statement Of Mark) வழங்கப்படும்.
இம்மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு மேற்காண் இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பழைய நடைமுறையில் (1200 மதிப்பெண்கள்) நிரந்தர பதிவெண் (Permanent Register Number) கொண்டு தேர்வெழுதிய மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை, மார்ச் 2024 பொதுத் தேர்வில் எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாகத் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
நிரந்த பதிவெண் இல்லாமல் (மார்ச் 2016 பொதுத் தேர்விற்கு முன்னர்) மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய தேர்வர்கள், தற்போது மார்ச்/ ஏப்ரல் 2024 பொதுத் தேர்வெழுதி இருப்பின், அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.