சென்னை மாநகரம் முழுவதும் கொசு மருந்து தெளிப்பதற்காக மாநகராட்சியால் வாங்கப்பட்ட ஆறு ட்ரோன்களும் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.

இந்த ட்ரோன்களை கொண்டு செல்ல ஒப்பந்தம் செய்யப்பட்ட வாகனங்களின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிதாக வாகனங்களை வாடகைக்கு விட யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

ட்ரோன்களை கொண்டு செல்ல டெம்போ டிராவலர் போன்ற வாகனங்கள் தேவைப்படும் நிலையில் அந்த வாகனத்தில் இரசாயனத்தை ஏற்றிச் செல்வதால் அதன் வாசனை வேறு பயணிகளுக்கு பிரச்சனையை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.

ஏற்கனவே மாநகராட்சிக்கு சொந்தமான காப்பகங்களுக்கு மக்களை ஏற்றிச் சென்றபோது அவர்கள் இதுபோன்ற பிரச்சனையை சந்தித்ததாக கடந்த மாதம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொசு மருந்து தெளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆறு ட்ரோன்களை கொண்டு செல்ல மூன்று வாகனங்களை புதிதாக வாடகைக்கு எடுக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

இதனையடுத்து ஆறு மாத காலத்திற்கான ஒப்பந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறும் பட்சத்தில் சென்னை மாநகர மக்களுக்கு கொசு தொல்லையில் இருந்து ஓரளவு விமோசனம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.