இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முன் வரி அனுமதிச் சான்றிதழைப் பெறுவது கட்டாயம் என்று பட்ஜெட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவை விட்டு வெளியேறத் தேவையான அனுமதிச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான விதிகளை பட்ஜெட் கடுமையாக்கியுள்ளது.

அக்டோபர் 1 முதல், இந்தியர்கள் அனைவரும் கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் அவர்களின் கணக்கு தெளிவாக இருப்பதை உறுதிப்படுத்தும் அனுமதிச் சான்றிதழ் பெறவேண்டும்.

வருமான வரி (ஐ-டி) சட்டப் பிரிவு 230 இன் படி, இந்தியாவில் வசிக்கும் எவரும் நாட்டை விட்டு வெளியேறும் முன் வரி அதிகாரிகளிடமிருந்து சான்றிதழைப் பெற வேண்டும். வரி நிலுவை இல்லை அல்லது நிலுவையில் உள்ள தொகையைச் செலுத்த ஏற்பாடு செய்திருப்பதை இந்தச் சான்றிதழ் உறுதிப்படுத்துகிறது.

இந்தத் தேவை வருமான வரி (I-T) சட்டத்தின் கீழ் உள்ள வரிகளையும், அதே போல் முந்தைய செல்வ வரி, பரிசு வரி மற்றும் செலவு வரிச் சட்டங்களையும் உள்ளடக்கியது என்றும் இதுகுறித்த தெளிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கறுப்புப் பணச் சட்டத்தின் 42 மற்றும் 43 பிரிவுகளின் கீழ், வெளிநாட்டில் உள்ள சொத்துகளின் (ரியல் எஸ்டேட் தவிர) மதிப்பு குறித்து அறிவிக்கவில்லை என்றால் ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

வழக்கமாக இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும், தங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது, ​​அனைத்து வெளிநாட்டு சொத்துகளையும் (பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற முதலீடுகள் உட்பட) மற்றும் இந்த சொத்துக்களிலிருந்து பெறப்படும் வருமானத்தை அறிவிக்க வேண்டும் என்பது விதி.

அவர்கள் வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து விவரங்களைத் தெரிவிக்கவில்லை அல்லது அவற்றுடன் தொடர்புடைய ஐடிஆரைச் சமர்ப்பிக்கத் தவறினால், சொத்தின் மதிப்பைப் பொருட்படுத்தாமல் கருப்புப் பணச் சட்டத்தின் 42 அல்லது 43 பிரிவுகளின் கீழ் ₹10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

இருப்பினும், முந்தைய ஆண்டில் வங்கிக் கணக்கில் ₹5 லட்சத்திற்கு மிகாமல் மொத்த இருப்பு வைத்திருப்பவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்று இருந்தது.

இனி வெளிநாட்டில் உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ₹20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் அபராதத்தை நீக்க 2024 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் 1, 2024 முதல் அமலுக்கு வரும்.