சென்னை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் நகலே இன்றைய பட்ஜெட்  என  மூத்த காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற தேர்தலின் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பாளராக இருந்தவருமான முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இதில்,  கல்வித்துறை, வேளாண்துறை, புதிய வேலைவாய்ப்புகள், புதிய தொழில் நிறுவனங்கள் என ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையைத்தான், தற்போது மத்திய பட்ஜெட் என பாஜக படித்திருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் விமரிசித்துள்ளார்.

இதுகுறித்து தனது கருத்தை சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள,   காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், மாண்புமிகு எஃப்.எம்., தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எல்.எஸ் 2024 காங்கிரஸ் அறிக்கையைப் படித்தார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்,

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளால், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வாசித்திருக்கிறது

வருமான வரி நிலையான கழிவு உயர்வு, ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்ததும் மகிழ்ச்சி அடைந்தேன்.

காங்கிரஸ் கட்சி, இந்த ஏஞ்சல் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகாலமாக வேண்டுகோள் விடுத்து வந்தது. இது தொடர்பாக மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் 31வது பக்கத்தில் உள்ளதை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

மேலும், மத்திய அரசின் பட்ஜெட்டில், இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும் என்ற திட்டத்தை நிதியமைச்சர் அறிமுகப்படுத்தியதை வரவேற்கிறேன். இந்த திட்டம், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் 11வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள வேறு சில திட்டங்களையும் மத்திய நிதியமைச்சர் பயன்படுத்தியிருந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருப்பேன். அவர் தவறவிட்ட சில வாய்ப்புகளை விரைவில் பட்டியலிடுவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் ஏஞ்சல் வரி விதிப்பு முறை முற்றிலும் அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள், திரட்டும் மூலதனத்துக்கு விதிக்கப்படுவது ஏஞ்சல் வரி. புதிய நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி கோரினால், ஏஞ்சல் வரி விதிப்பு நடைமுறையில் இருந்தது. இது ரத்து செய்யப்படுகிறது.

உற்பத்தித் துறையில் 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தரப்படும். வேலை வாய்ப்பு பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை தரப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின்போது, மகளிர், இளைஞர்கள், விவசாயிகள் என ஐந்து பிரிவினருக்கான கொள்கைகள் அறிவிக்கப்பட்டது போல, மத்திய பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழில்துறை என ஒவ்வொரு பிரிவினருக்குமான திட்டங்களாக அறிவிக்கப்படும் என்று அறிமுகப்படுத்தினார்.