சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து யுவராஜா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்,
ஜிகே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவராக நீண்ட ஆண்டுகளாக இருந்து வருபவர் யுவராஜா. ஜிகே வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியபோது, அவருடன் வந்தவர்களில் யுவராஜா முக்கியமானவர். இவர் காங்கிரஸ் கட்சியில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த நிலையில், தமாகாவிலும் இளைஞர் காங்கிரஸ் தலைவராகவே இருந்து வந்தார். கட்சி தலைவர் ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளரான யுவராஜா, கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், ஈரோடு இடைத்தேர்தலின்போதும் கட்சி தலைமையுடன் அதி‘ருப்தி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலிலும், தமாகா பாஜக கூட்டணியில் சேர்ந்தும் யுவராஜவுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து யுவராஜா திடீரென சேலம் சென்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார். இதனால் அவர் தமாகாவில் இருந்து வெளியேறுவார் என தகவல்கள் பரவின. ஆனால், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என யுவராஜ் விளக்கம் அளித்தார்.
இந்த சூழ்நிலையில் தற்போது தான் வகித்து வந்த இளைஞரணித் தலைவர் பதவியை யுவராஜா ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனிடம் தனது ராஜினாமா கடிதத்தை யுவராஜா அளித்துள்ளார். ஆனால், அவர் கட்சியில் இருந்து விலகவில்லை என்று கூறப்படுகிறது. அவரது ராஜினாமா கடிதத்தில், “பல ஆண்டுகளாக இளைஞரணித் தலைவராக இருந்துவிட்டேன். புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பயணிப்பேன் “வரும் காலங்களில் தமாகாவின் கட்டமைப்பை சிறப்பாக கட்டமைக்க அயராது பாடுபடுவேன். தலைவரான உங்களுடன் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பயணித்து, அயராது உழைத்து பாடுபடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.