சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக  தேடப்பட்டு வந்த பிரபல பெண் தாதா அஞ்சலை கைது செய்யப்பட்டு உள்ளார். இவர்  பா.ஜ.க முன்னாள் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது,.

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவ்ர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பா.ஜ.க முன்னாள் நிர்வாகி அஞ்சலையை தேடிவந்த  தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  திமுக, அதிமுக, பாஜக என பல்வேறு கட்சிகளின்  தாதாக்களும் சம்பந்தப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான அஞ்சலைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால்,  தலைமறைவாக  இருந்த பெண் தாதாவை  போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், அவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்,   இந்த வழக்கில் மேலும் சில ரவுடி கும்பல்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால், மொத்த ரவுடிகள் விவரத்தையும் போலீசார் முழுமையாக சேகரித்து வருகின்றனர். மேலும் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கையும் தூசு தட்டி விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் அவருடைய வீட்டுக்கு வெளியே பட்டப்பகலில்  கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் நாட்டையே உலுக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி தமிழகத்திற்கு வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவரை அவருடைய வீட்டுக்கு வெளியே படுகொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை உள்ளது என்று விமர்சனம் செய்தார். இந்த கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதைத்தொடர்ந்து,  அம்ஸ்ட்ராங்க் கொலை  நடந்த அன்றே 8 பேர்  அண்ணாநகர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். அதன்படி,  அவர்களை கைது செய்த காவல்துறையினர் மேலும்,  ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு (39), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான  திருவேங்கடம் ஜூலை 14 ம் தேதி போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முக்கிய குற்றவாளியை முழுமையாக விசாரிக்காமல், அவரை காவல்துறை சுட்டுக்கொன்றதும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியான, பா.ஜ.க முன்னாள்  வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவர்  இருந்த அஞ்சலையை காவல்துறையின் தனிப்படை தேடி வந்தனர்.

இந்த நிலையில்,  தலைமறைவாக இருந்த அஞ்சலை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. புளியந்தோப்பை சேர்ந்தவர்  அஞ்சலை என்பது குறிப்பிடத்தக்கது.