சென்னை: “பாதுகாப்பு கருதியே நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை குறைவான பேருந்துகள்  இயக்கப்படுகிறது. அதனால், பொதுமக்கள்  இரவு 12 மணிக்கு முன் பயணத்தை திட்டமிடுங்கள் என போக்குவரத்ததுறை அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த சனிக்கிழமை (20ந்தேதி)  இரவு கிளாம்பாக்கம்  அன்று சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல சரிவர பேருந்துகள் இல்லை எனக்கூறி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  சென்னை  கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண் டார்.  அப்போது அதிகாரிகள் மற்றும் பயணிகளிடம் பேருந்து சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கம் அதிகம் இருக்காது. நள்ளிரவு 12 மணியில் முதல் அதிகாலை 4 மணிவரை பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு கருதி மிக குறைவான பேருந்துகள் தான் இயக்கப்படும் என்றவர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் பேருந்துகள் குறைவாக தான் இயங்கும். பயணிகளின் கோரிக்கையை ஏற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இரவு 12 மணி வரை இயக்கப்படுகிறது என்றவர், பயணிகள் தங்களுடைய பயணத்தை இரவு 12 மணிக்கு முன்னதாகவே திட்டமிட்டு கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தமிழக முதலமைச்சர் கூறியதன் பேரில் தீபாவளி, பொங்கல் போன்ற காலங்களில் மட்டுமல்லாமல், திருவிழா காலங்களிலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த காலங்களை விட தற்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் பயணிகள் தங்களுடைய பயணங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும், மின்சார ரயில்கள் ரத்து குறித்து கேட்டபோது,  கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு ரயில் பயணம் தடைபடுபவர்கள் பேருந்துகள் மூலமாக செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இரவு 12 மணிக்கு பிறகு ஒரு 50 பேர் சேர்ந்து நேரக் காப்பாளரிடம் சென்று மைக்கை அடித்து உடைப்பதும், அவரை அடிக்கப் பாய்வதும் தவறான விஷயம்” என்று அமைச்சர் சிவசங்கரன் கூறினார்.