டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஆர். மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டாவது நீதிபதியாக, தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்றம் செல்கிறார்.
உச்ச நீதிமன்றத்தில், தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பதவி வகித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இரண்டாவது நீதிபதியாக ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். அதே வேளையில், உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவர் டெல்லி பார் கவுன்சிலில் இருந்து உச்ச நீதிமன்றம் சென்றவர். அதனால், தமிழ்நாட்டில் இருந்து நேரிடையாக உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
நீதிபதி ஆர்.மகாதேவன் சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர். 1963ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ந்தேதி பிறந்தவர். நங்கநல்லூர் பகுதியில் ள்ள நேரு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், ஜெயின் கல்லூரியில் பட்டப்படிப்பையும், மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்து கடந்த 1989-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். தனது 24 ஆண்டுகால வழக்கறிஞர் பணியில் சிவில், கிரிமினல் வழக்குகள், மறைமுக வரிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய கலால் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், தமிழக அரசின் கூடுதல் அரசு ப்ளீடராகவும், மத்திய அரசின் முதுநிலை வழக்கறிஞராகவும் பணியாற்றி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை திறம்பட நடத்தியுள்ளார்.
இவரை பணியை கவுரவிக்கும் வகையில், கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 25ந்தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். அதில் முன்னேறி, தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, இவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி உயர்த்தி உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. அதை ஏற்று குடியரசு தலைவர் ஆணை பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நீதிபதி ஆர்.மகாதேவன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 11 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை பிறப்பித்துள்ளார். குறிப்பாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியமிக்க புராதன சின்னங்கள், பழமையான கோயில்கள், கோயில் சொத்துக்கள், நகைகள் பாதுகாப்பு மற்றும் சிலை திருட்டு வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு தலைமை வகித்த இவர், இதுதொடர்பாக தமிழக அரசுக்கு 75 கட்டளைகளை பிறப்பித்திருந்தார்.
மேலும், பெண்களுக்கான சமத்துவ உரிமை, மதம் மற்றும் சமயம் சார்ந்த வழக்குகளில் அரசியலமைப்பு சட்டம் சார்ந்த உரிமைகள், திருக்குறளை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் சேர்த்து நன்னெறி போதிக்க வலியுறுத்தியது என இவரது பங்களிப்பு அளப்பரியது. இவரது தீர்ப்பை முன்மாதிரியாக கொண்டு திருக்குறள் தற்போது மலேசிய நாட்டின் பாடத்திட்டத்திலும் அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு, நடுவர் மன்றம், அரசியலமைப்பு, தொழிலாளர் மற்றும் சேவை சட்டம், வரி விதிப்பு போன்ற பொதுநல வழக்குகளிலும் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார். சட்டப்பணிகள் ஆணைக்குழு உட்பட சென்னை உயர் நீதிமன்றத்தின் பல்வேறு கமிட்டிகளுக்கு தலைமை வகித்து நீதி மற்றும் நிர்வாகத்தில் பல்வேறு மறு சீரமைப்புகளை கொண்டு வந்துள்ளார்.