பெங்களூரு

ர்நாடக அரசு கனமழை காரணமாக தமிழகத்துக்கு திறக்கப்படும் காவிரி நீர் அளவை அதிகரித்துள்ளது.

கடந்த இரு வாரங்களாக கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிவதால் கர்நாடக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை கர்நாடக அரசு அதிகரித்துள்ளது.

கேஆர்எஸ் அணையின் மொத்த கொள்ளலாவான 124.80 அடியில் நீர்மட்டம் தற்போது 110.60 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 36,675 கன அடியாக உள்ள நிலையில், அங்கிருந்து தற்போது வினாடிக்கு 651 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கபினி அணையில் நீர்திறப்பு வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 45,651 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.