கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் கொலம்பியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜெண்டினா.
தொடர்ந்து இரண்டாவது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா இதுவரை 16 முறை கோபா அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.
நடப்பு உலக கால்பந்து சாம்பியனான அர்ஜென்டினா அணி ஆரம்பம்முதலே சிறப்பாக விளையாடிய போதும் போட்டி நேர முடிவில் இரு அணிகளுமே கோல் அடிக்க முடியவில்லை.
இதனால் எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்ட நிலையில் போட்டியின் 112வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லாட்டரோ மார்ட்டினஸ் அடித்த கோல் மூலம் 1-0 என்ற கணக்கில் கொலம்பியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
முன்னதாக ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இருந்தபோதும் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.