கொல்கத்தா

பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ்வதே இந்தியாவின் பாரம்பரியம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று கொலக்த்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்,

“நமது நாட்டின் வரலாற்றைப் பார்க்கும்போது, இந்துக்களும், முஸ்லிம்களும் நெடுங்காலமாக ஒன்றாக வாழ்ந்து, ஒற்றுமையாக செயல்பட்டு வருகின்றனர். அதுவே இந்தியாவின் பாரம்பரியமாக உள்ளது. உஸ்தாத் அலி அக்பர் கான் மற்றும் பண்டிட் ரவிசங்கர் ஆகியோரை அவர்களின் மத அடையாளங்களைக் கொண்டு நாம் வேறுபடுத்த முடியுமா? அவர்களது மரபுவழி இசையின் மூலமாக மட்டுமே அவர்களை வேறுபடுத்தலாம்.

மும்தாஜின் மகன் தாரா ஷிகோ, உபநிடதங்களை பார்சியில் மொழி பெயர்த்தவர்களுள் ஒருவர் ஆவார். இந்து மத நூல்களையும், சமஸ்கிருத மொழியையும் அவர் நன்கு கற்றிருந்தார் என்பதை இது காட்டுகிறது.

மும்தாஜ் பேகத்தின் நினைவாக கட்டப்பட்ட பிரம்மாண்டமான தாஜ்மகாலுக்கு எதிரான கருத்துகளை முன்வைக்கும் சில குழுக்கள் தற்போது இருக்கின்றன. தாஜ்மகாலை ஒரு முஸ்லீம் ஆட்சியாளருடன் தொடர்புபடுத்தப்படாத வகையில் அதன் பெயரை மாற்ற விரும்பும் சில குழுக்களும் நம் நாட்டில் இருக்கின்றன.”

என்று உரையாற்றி உள்ளார்.