கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய சாவு எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில், கடந்த மாதம் (ஜூன்) 18ந்தேதி அன்று  கண்ணுகுட்டி என்பவர் விற்பனை செய்த  கள்ளச்சாராயத்தை குடித்ததால்  200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 66  பேர் உயிரிழந்துள்ளனர். பலருக்கு கண் பார்வை பறிபோன நிலையில், இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தால் அதிக உயிர்களை பலி வாங்கியது இந்த கள்ளக்குறிச்சி சாவாகும். இந்த விவகாரத்தில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துஉள்ளது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது, 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான இடமாற்ற உத்தரவை   மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டு உள்ளார்.
கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியராக கமலக்கண்ணன், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியராக மனோஜ் முனியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் ஏற்கனவே இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரையும் பணியிடை மாற்றம் செய்த நிலையில் தற்போது புதிய ஆட்சியர் 11 வட்டாட்சியர்களை மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.