சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 9மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

கடந்த 10ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8மணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதலில் தபால் வாக்கு எண்ணும்போது சலசலப்பு ஏற்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானோர் மொத்தம் 544 பேர் இந்த தேர்தலில். வாக்கு செலுத்தி உள்ளனர். மேலும் 798 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த வாக்குகள் எண்ணும்போது, தபால் வாக்குகளில் உள்ள வரிசை எண்கள் தவறாக இருப்பதாக பா.ம.க, தி.மு.க முகவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, வாக்கு பதிவு இயந்திரம் திறக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 9 மணி நிலவரப்படி, தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 11,360 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதுவரை பா.ம.க வேட்பாளர் 5,976 வாக்குகள், அபிநயா 570 வாக்குகள் பெற்றுள்ளனர்.