சென்னை: சென்னையின் பல பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் சூறைக்காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பொதுவாக இரவு நேரங்களில் இதுபோன்று மழை பெய்வதால், பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதற்கிடையில், தற்போது, மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும்,  தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவும் சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. நேற்று மாலை முதலே பல பகுதிகளில் மழை தொடங்கிய நிலையில், நள்ளிரவு மட்டுமின்றி அதிகாலையிலும் பல பகுதிகளில் மழை பெய்தது.

இரவில் பெய்த கனமழையால் விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 15 விமானங்கள், தரை இறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து வருகின்றன. சென்னைக்கு வர வேண்டிய 4 விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 16 விமானங்கள் வானிலை காரணமாக பல மணி நேரமாக தாமதமாகி வருகின்றன.

4 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த நிலையில், அவை பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.