சென்னை: தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளும் பொதுப்பணித்துறையின் மூலமே கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்த துறைகளில் மிகவும் பழமையான துறை, பொதுப்பணித்துறையாகும். இந்த துறை மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கட்டடங்களின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பல அரசு கட்டிங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனால் பல கட்டிங்களில் விதிமீறல் உள்பட பல்வேறு குளறுபடிகள் காணப்படுகிறது. இதனால் கட்டிடங்களின் ஸ்திரத்தன்மையும் கேள்விக்குறியாகி வருகிறது. சமீபத்தில் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளும் பொதுப்பணித்துறையின் மூலமே கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா அரசாணை பிறப்பித்துள்ளார்.
அதில், “விலக்கு அளிக்கப்பட்ட குறிப்பிட்ட சில அரசு பொதுத்துறை நிறுவனங்களை தவிர்த்து அனைத்து துறைகளும் தங்கள் துறையின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டடங்களின் கட்டுமானம் மற்றும் புனரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறையின் மூலமே மேற்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், சென்னை குடிநீர் வாரியம், போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வாணிப கழகம், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் மற்றும் நகராட்சி நிர்வாக உள்ளிட்ட துறைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட துறைகளின் பொறியியல் பிரிவுகள் தங்களது துறைகளில் கட்டப்படும் கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். எதிர்பாராத நேரங்களில் மற்ற துறைகளின் கட்டட கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் பொதுப்பணித்துறையிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறையின் மூலமே மேற்கொள்ள வேண்டும். சிறப்புப் பொறியியல் பிரிவை வைத்துள்ள துறைகள் அந்த பிரிவின் மூலம் சிறப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால், இந்த துறைகளின் கட்டடப் பணிகள் அனைத்தும் பொதுப்பணித்துறையின் மூலமே மேற்கொள்ள வேண்டும்.
மாநில அரசு நிதியில் மேற்கொள்ளப்படும் முத்திரை பதிக்கும் திட்டங்களின் கட்டுமான பணிகள் அனைத்தும் பொதுப்பணித்துறையின் மூலமே மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது” இவ்வாறாக அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டான்ஜெட்கோ தனது அதிகாரப்பூர்வ ‘X’ வலைதளபக்கத்தில் “தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி” என்று குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டடங்களுக்கு, மின் இணைப்பு பெற ‘கட்டட நிறைவு சான்றிதழ்’ தேவை இல்லை” என்று குறிப்பிட்டு கட்டட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என்று குறிப்பிடும் கட்டடங்களை வகைப்படுத்தியுள்ளனர். அவை பின்வருமாறு;
14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டடங்கள்.
750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடு.
14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டடங்கள்.
அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள்.
இதுமட்டும் அல்லாது, இன்றே விண்ணப்பியுங்கள் என்று குறிப்பிட்டு https://www.tangedco.org/en/tangedco/online-services/onlinesernew/ என்ற இனைய முகவரியையும் பதிவிட்டுள்ளார்.