சென்னை

விரைவில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் 200 புதிய பேருந்துகளை இயக்க உள்ளது.

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் நெடுந்தூர பயணங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. தனியார் ஆம்னி பஸ்கள் சொகுசு பஸ்களை இயக்கி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அவற்றிற்கு இணையாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பஸ்களை இயக்கி வருகின்றன.

கடந்த 2022-2023-ம் ஆண்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு அறிவிக்கப்பட்ட 200 புதிய பேருந்துகள் தற்போது கர்நாடகா மாநிலத்தில் கட்டுமானம் செய்யப்பட்டு சென்னை கொண்டுவரப்படுகின்றன. இவை சுற்றுச்சூழலுக்கு உகந்த பி.எஸ்.-6 ரக பஸ்கள் ஆகும்.
வெளிர் பச்சை நிறத்தில் பேருந்துகள் அமைக்கப்பட்டுள்ளன, இவற்றில் 150 பஸ்கள் கீழே 30 இருக்கைகள், மேலே 15 படுக்கை வசதி கொண்டதாக வடிவமைக்கப்படுகின்றன. மீதமுள்ள 50பேருந்துகள் முதியோர் மற்றும் பெண்கள் நலன் கருதி கீழே உள்ள ஒற்றை இருக்கை பகுதியும் படுக்கை வசதி கொண்டதாக மாற்றி வடிவமைக்கப்பட்டு கீழே 20 இருக்கைகள் மற்றும் 5 படுக்கை வசதிகளுடன் மேலே 15 படுக்கை வசதியுடனும் வடிவமைக்கப்படுகின்றன.

முதல் கட்டமாக 25 பேருந்துகள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு சென்னையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக தலைமை நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக வாங்கப்பட்டுள்ள பேருந்துகளில் கருவிகள் சரியாக இருக்கின்றனவா? வர்ணங்கள் சரியாக இருக்கிறதா? எங்கேனும் உராய்வுகள் ஏற்பட்டுள்ளனவா? என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜூலை மாதம் இறுதிக்குள் சுமார் 60 பேருந்துகள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு வந்துவிடும் என்று தெரிகிறது. மீதமுள்ள பேருந்த்கள் அனைத்தும் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் முழுமையாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இந்த சேவைக்கான அறிமுக விழா முதல்வரின் ஒப்புதலுடன் போக்குவரத்து அமைச்சரால் விரைவில் நடைபெற இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.