சென்னை: தமிழ்நாட்டில், மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயரும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், சலுகையை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்வாரியமான டான்ஜெட்கோ ( tangedco ) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி, தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு, மின் இணைப்பு பெற ‘கட்டிட நிறைவு சான்றிதழ்’ தேவை இல்லை என தெரிவித்து உள்ளது.
அதன்படி, 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.
750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடுகளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.
14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்ககளுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை.
அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கு நிறைவு சான்றிதழ் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன. மேலும், ஒரே நபரின் பெயரில் பல மின் மீட்டர்கள் ஒருங்ணைக்கப்பட்டு ஒரே மீட்டராக மாற்றும் உத்தரவும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், திடீரென மின் இணைப்புக்கான விதிமுறையில் சலுகை அறிவித்து உள்ளது.