லக்னோ: உ.பி., மாநிலம் ஹாத்ரஸில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்திய அரசின் சிறப்பு புலனாய்வு குழு, 300 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மாநில அரசிடம் தாக்கல் செய்துள்ளது. அதில், இந்த  விவகாரத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்க வாய்ப்பு இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளதுடன், இந்த சோகத்துக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி  உ.பி.,யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில்  சுராஜ்பால் என்கிற போலே பாபா என்ற சாமியாரின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.  இந்த சொற்பொழிவில் பங்கேற்று போலே பாபா  பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு சுமார்   80 ஆயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு, அந்த அளவுக்கே நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், பாபாவின் பேச்சை கேட்கவும், அவரிடம் ஆசி பெறவும் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் வரத்தொடங்கினர். இதனால், பாபாவின்  நிகழ்ச்சியில் சுமார்,  2.50 லட்சம் பேர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்து, பக்தர்கள் அங்கிருந்து வெளியேறும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.  ஒருவருக்கொருவர் தள்ளி விட்டதில், பலர் கீழே விழுந்து அடிபட்டும், மிதிபட்டும், மூச்சு திணறியும்  சுமார் 1 21 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் யோகி நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில், இந்த விவகாரம் குறித்து, விசாரணை நடத்த சிறப்பு குழுவையும் நியமித்தார். மேலும் காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களை கைது செய்துள்ள நிலையில், தலைமறைவான போலே பாபாவை தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக சிக்கந்திரா ராவ் போலீஸார், பாரதிய நியாயசன்ஹிதா சட்டத்தின் பிரிவான மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து,  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேர் செய்யப்பட்டனர். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட தேவபிரகாஷ் மதுகர் தலைமறைவானார். பின்னர் அவரும் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே ஜூலை 6-ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த போலே பாபா, நிகழ்ச்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் தப்பமாட்டார்கள் என்று கூறியவர் இந்தத் துயர சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் யோகி அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவில்,  ஏடிஜிபி அனுபம் குல்ஷ்ரேஷ்தா மற்றும் அலிகார்க் கமிஷனர் சைத்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்ர்கள், ஹத்ராஸ் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். சுமார்  128 சாட்சிகள், சொற்பொழிவு நிகழ்ச்சியில் பணியில் இருந்த போலீசார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குமூலம் பெற்று அறிக்கை தயாரித்து மாநில அரசிடம் தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில் ,ஹாத்ரஸ் சம்பவத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளதை மறுக்க முடியாது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். கூட்ட நெரிசலுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு. உள்ளூர் நிர்வாகம், போலீசார் இந்நிகழ்ச்சியை சாதாரணமாக எடுத்துக் கொண்டனர் எனக் கூறப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த அறிக்கை குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்த உள்ளார்.

அறிக்கை விவரம்:

ஹத்ரஸில் நிகழ்ந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக,   ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியர் அனிஷ் குமார், காவல் கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் மற்றும் எஸ்டிஎம் மற்றும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய சிக்கந்த்ராவ் சி.ஓ., ஜூலை 2ம் தேதி சத்சங் நிகழ்ச்சியில் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆகியோரின் வாக்குமூலங்கள் அடங்கியுள்ளன.

இந்த பெரும் சோகத்தக்க,. ஹத்ராஸ்  சத்சங் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களே பொறுப்பு. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கப்பட்டவர்களை விட அதிக அளவிலான மக்களை அழைத்தது, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய தவறியது, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்யாதது போன்றதே நெரிசல் சம்பவத்துக்கு காரணம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  நிகழ்ச்சியை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர் கூறுகையில், “பாபா அவரது காலடி மண்ணை சேகரிக்க வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்தே அந்தச் சம்பவம் நடந்தது.

பாபாவின் காலடி மண்ணை எடுக்க பக்தர்கள் விரைந்த போது ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். நெரிசலுக்கு மத்தியில் பாபாவின் வாகனம் அந்த இடத்தைவிட்டுச் சென்றது. நிர்வாகிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மட்டுமே எங்களுக்கு உதவினர்” என்று தெரிவித்தார்.

சதியே காரணம்:

இதனிடையே, போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறுகையில், “ஜூலை 2-ம் தேதி 121 பேர் இறப்புக் காரணமாக இருந்த நெரிசல் சம்பவம் நடைபெற்ற போது சுமார் 15 -16 பேர் முகத்தை மூடிய படி கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் நச்சு வாயுவை கூட்டத்தில் தெளித்துவிட்டு காரில் தப்பிச் சென்றனர். போலே பாபாவை சிக்கவைக்க சதி நடந்துள்ளது. நெரிசல் சம்பவம் ஒரு விபத்து அல்ல. அது ஒரு சதிச் செயல்” என்று தெரிவித்திருந்தார். “இது விபத்து இல்லை என்றால், இது யாருடைய சதி? இவை அனைத்தும் விசாரிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து எஸ்ஐடி தவிர, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதித்துறை குழு கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.