சென்னை: 100 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 12-ந்தேதி திருச்சி அருகே உள்ள முக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது.
திருச்சியிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது மணப்பாறை. இங்கிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது பொன்முச்சந்தி கிராமம். இந்த ஊரில் இருந்து சுமார் ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள, பொன்சிங்கம்பட்டி என்ற கிராமத்தில் அந்தாள பரமேஸ்வரி சமேத முக்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தேவியருடன் முருகன், பைரவர் அருள்பாலிக்கின்றனர். கிரக தோஷங்கள் அனைத்தும் தீர்க்கும் திருத்தலம் இது எனப்புகழ் பெற்றது. சுமார் 1,356-ஆம் வருடம் திரிபுவனச் சக்கரவர்த்தியால் எழுப்பப்பட்ட ஆலயம் இது எனத் கல்வெட்டுக்கள் தெரிவிக்கிறது. பிரமாண்டமான கருங்கல் திருப்பணியால் எழுப்பப்பட்ட ஆலயம் இது. பழமையான இந்த கோவிலில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக யாகசாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும், திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சீகம்பட்டி கிராமம், பூர்த்திகோவில் திருமுக்தீஸ்வரர் கோவிலுக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 12-ந்தேதி அன்று குடமுழுக்கு நடை பெறுகிறது.
இதற்கான குடமுழுக்கு பணிகள் மற்றும் யாகசாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் குடமுழுக்கு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
கடந்த 07.5.2021 முதல் 8.7.2024 வரை தமிழ்நாட்டில் 1,844 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. 9,141 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.5,097 கோடி மதிப்பீட்டிலான 20,166 திருப்பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை 7,648 திருப்பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.