ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம்மீது பயங்கரவாதிகள் திடீரென சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில்,  5 வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும் மேலும் 6 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தில் மச்சேரி பகுதியில் ராணுவ வீரர்கள் சோதனை மேற்கொண்டனர்.   தொடர்ந்து, ராணுவ வீரர்கள் வழக்கம்போல் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். கதுவா நகரத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோஹாய் மல்ஹரில் உள்ள பத்னோடா கிராமத்தில் ராணுவ வாகனங்கள் சில ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். மேலும் 6 ராணுவ வீரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்றது. ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் அருகாமையில் உள்ள காட்டு வழியே தப்பி சென்றதாக கூறப்படுகிறது. பயங்கரவாத தகவல் தொடர்ந்து அந்தப் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில கட்சிகளின் ஆதரவுடன் பாஜக  3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி மீண்டும் பதவி ஏற்றுள்ளார். மேலும் நாட்டில்  காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் பலம் சற்று அதிகரித்துள்ள நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் பயங்கரவாதிகளின் நடவடிக்கை அதிகரித்து காணப்படுகிறது.