சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.  அவரது உடல் உடல்கூறாய்வுக்காக  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டு, அங்குள்ள  பிணவறைக்கு முன்பு  வெளியே கூடிய அவரது ஆதரவாளர்கள் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்  அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் காவல் உயரதிகாரிகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராக் படுகொலையில்,  தமிழக அரசு மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், இந்த கொலை சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில்,   இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டது மற்றும் பெருநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) அவற்றின் பேருந்துகள் சேவைகளை நிறுத்தியது. சென்னை மருத்துவமனைக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

தனிப்படையினா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா். இதில், கொலையாளிகள் உணவு விநியோகம் செய்யும் ஒரு நிறுவன சீருடையில் வந்தது தெரியவந்தது. இதனிடையே, சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் சரணடைந்தனர்.

வடசென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையர் ஆஸ்ரா கார்க் கூறுகையில், “கொலை வழக்கில், 4 மணிநேரத்தில் 8 நபர்களை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகிறோம். குற்றவாளிகளைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விசாரணைக்கு பின்னர் தான் கொலையின் நோக்கம் என்ன என்பது குறித்து தெரியவரும். கொலையின் உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். இந்த கொலை சம்பவத்தின் போது கொலையாளிகள் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை, சில கூர்மையான ஆயுதங்கள், கத்தியால் வெட்டிதான் கொலை செய்துள்ளனர்.