சென்னை: தமிழ்நாடு பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று மாலை  சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞா் ஆம்ஸ்ட்ராங்  பெரம்பூா் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் புதிதாக கட்டப்படும் அவரது வீட்டைப் பாா்வையிட  மாலை 6.40 மணியளவில் காரில் சென்றாா். காா் அந்த வீட்டின் அருகே சென்றதும், காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நண்பா்கள் வீரமணி, பாலாஜி ஆகியோருடன் ஆம்ஸ்ட்ராங் நடந்து சென்றாா்.

அப்போது 3 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 போ் கும்பல் , மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியது. இதைப் பாா்த்த அவரது நண்பா்கள் தடுக்க முயன்றனா். இதில் பாலாஜிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அரிவாள் வெட்டில் தலை, கழுத்துப் பகுதிகளில் ஆம்ஸ்ட்ராங் பலத்த காயமடைந்து கீழே விழுந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

அப்பகுதி மக்கள் ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு, ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஆம்ஸ்ட்ராங் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ஆம்ஸ்ட்ராங்கின் அரசியல் பயணம் ஆம்ஸ்ட்ராங்கின் சடலம் உடல்கூறு ஆய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. தனிப்படையினா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

இதில், கொலையாளிகள் உணவு விநியோகம் செய்யும் ஒரு நிறுவன சீருடையில் வந்தது தெரியவந்தது. இதனிடையே, சென்னை அண்ணாநகர் காவல் நிலையத் தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் சரணடைந்துள்ளனர்.

இந்த படுகொலைக்கு  பகுஜன் சமாஜ் கட்சியின்  தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது கண்டன அறிக்கையில்,  மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞா் ஆம்ஸ்ட்ராங் (54), அவரது வீட்டிற்கு அருகே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டனத்துகுரியது மற்றும் வருத்தத்துக்குரியது. வழக்குரைஞரான ஆம்ஸ்ட்ராங் தமிழகத்தில் வலுவான தலித் தலைவராக அறியப்பட்டார். குற்றவாளிகளுக்கு எதிராக மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில்,   மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி சென்னை வருகிறார். லக்னோவில் இருந்து  இன்று பிற்பகல் சென்னை வரும் மாயாவதி அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் லக்னோ திரும்புகிறார்.

இதுதொடர்பாக,  மாயாவதி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைதளத்தில் இன்று (சனிக்கிழமை) பகிர்ந்துள்ள பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை சென்னையில் அவரது வீட்டுக்கு வெளியே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் கூடிய தலைவர் அவர். அவரது படுகொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மிகவும் வேதனைக்குரிய இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு நாளை (ஞாயிறு) சென்னைக்கு நேரில் சென்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளேன். அவருடைய குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளேன். இத்தருணத்தில் அனைவரும் அமைதியையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.