மதுரை: இளைஞர்களின் வாழ்க்கையை மனதில் வைத்துக்கொண்டு மதுபான கொள்கைளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

நாளைய சமுதாயத்தின் தூண்களாக விளங்கும் இளைய தலைமுறையினரின் நலனை உறுதி செய்யும் வகையில், மதுபானக் கொள்கையை மாநில அரசு மறுபரிசீலனை செய்து, உணர்வு பூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் இது  என குறிப்பிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த டி.பிரபு என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,  திருச்சி வொரையூரில் குழுமணி மெயின் ரோட்டில் பொழுதுபோக்கு கிளப் திறப்பதற்கும் /அமைப்பதற்கும் அனுமதி அளிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள கோவில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 50 மீட்டர் சுற்றளவுக்குள் மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி இல்லை. அதே சமயம் மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்களில்) விதிகள், 2003-ஐ பயன்படுத்தி, 100 மீட்டர் தொலைவில் கடை அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்,  நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது,   பல்வேறு காரணங்களுக்காக இதுபோன்ற முடிவை எடுப்பது அரசுக்கு எளிதான காரியமாக இருக்காது. இருப்பினும், இளைய தலைமுறையினரை ஆபத்தில் ஆழ்த்தும் மதுக் கொள்கையை ஆதரிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது.

சில்லறை விற்பனை விதிகளின் விதி 8-ன்படி உரிமம் வழங்குவதற்காக டாஸ்மாக் கடை அல்லது பார் அல்லது பொழுதுபோக்கு கிளப் இருக்கும் இடம் ஆகியவை ஐஎம்எஃப்எல் விற்பனைக்கான இடம் என்று உறுதி செய்யப்படுகிறது.

மனுதாரர் எழுப்பிய பிரச்சினையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எந்த விதி மீறலும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. விதியை உருவாக்குவது அரசாங்கத் திடம் உள்ளது, மேலும் ஒரு டாஸ்மாக் கடையின் இருப்பிடம் கோவில்கள் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து 50 மீ தொலைவில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இருப்பினும், நிர்வாகத்தின் கூற்றுப்படி, இந்த விற்பனை நிலையங்கள் பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடைகளை அமைக்கும் அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்த்து குடியிருப்புவாசிகள் தொடர்ந்த இதேபோன்ற பல வழக்குகள் சமீபத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

“இதுபோன்ற பெரும்பாலான வழக்குகளில், அதிகாரிகள் தாங்கள் விதிகளை மீறவில்லை என்று கூறி டி.பிரபு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர். மேலும் சில்லறை விற்பனை விதிகள், குறிப்பாக விதி 8, மதுபான விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்களால் ஏற்படும், அன்றாட சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால், இங்கு டாஸ்மாக் கடைகளை பாதுகாக்கும் வகையில் விதி வகுக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் சமூகம் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிகிறது.

இதனால், தமிழ்நாடு மதுபான கொள்கையில் நாளைய சமுதாயத்தின் தூண்களாக விளங்கும் இளைய தலைமுறையினரின் நலனை உறுதி செய்யும் வகையில் திருத்தம் செய்ய வேண்டும்.  மதுபானக் கொள்கையை மாநில அரசு மறுபரிசீலனை செய்து, உணர்வு பூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்கான தருணம் இது என்று தெரிவித்து உள்ளது.