ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் புஷ்பந்தரா (34). சென்னை அண்ணா நகரில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் குடியிருப்பில் தங்கி பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த மாநிலமான ராஜஸ்தானில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் 5-வது அவென்யூவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்து புஷ்பந்தரா தனது மனைவியின் வங்கிக் கணக்கிற்கு ரூ. 5 லட்சம் பணம் டெபாசிட் செய்தார்.

இந்த நோட்டுகளை சோதித்த வங்கி ஊழியர் அதில் 6 நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்று கண்டுபிடித்தார். இதுகுறித்து வங்கி மேலாளரிடம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர், அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் புஷ்பந்தரா தனது தந்தையின் மருத்துவ செலவிற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி 5 லட்ச ரூபாயை வங்கியில் செலுத்தியதாகக் கூறினார்.

மேலும், அவர்களிடம் வாங்கிய பணத்தில் கள்ள நோட்டு இருந்திருக்கலாம் என்று புஷ்பந்தரா கூறியதை அடுத்து அவர் யார் யாரிடம் கடன் வாங்கினார் என்பது குறித்தும், கள்ள நோட்டுகள் எப்படி வந்தன என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வங்கி மேலாளர் காவல்துறையில் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.