விக்கிரவாண்டி: இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஓட்டுப்போட வலியுறுத்தி வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க திமுக நிர்வாகி வீட்டில் வேட்டி, சேலைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தேர்தல்ஆணையம் நடவடிக்கை எடுக்காத நிலையில், பாமகவினர் வீட்டுக்குள் புகுந்து, வேட்டி, சேலைகளை அள்ளி வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10ந்தேதி நடைபெற உள்ளது.வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா உள்பட பல்வேறு சிறிய கட்சிகளைச் சேர்ந்த 16 வேட்பாளர்களும், சுயேட்சையாக 40 பேர் என மொத்தம் 56 போட்டியிடுகின்றனர். அங்கு மும்முனை போட்டி நிலவுவதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ளது.
இந்த தொகுதியில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தலைமை அமைச்சர்களைக்கொண்ட குழுவை களமிறக்கி உள்ளது. அதுபோல பாமக சார்பில், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்பட பலமான அணி களத்தில் இறங்கி திமுகவுக்க டஃப் கொடுத்து வருகிறது. இதற்கிடையில், அந்த தொகுதி வாக்காளர்களை பணம் கொடுத்து திமுகவினர் அடைத்து வைத்துள்ளதாகவும், திமுகவினர் இப்போதே வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்கி வருவதாகவும் பாமக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட ஆசாரங்குப்பம் கிராமத்தில் திமுக கிளை செயலாளர் ஒருவரின் வீட்டில், வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க குவித்து வைக்கப்பட்டிருந்த வேட்டி, சேலைகளை பாமகவினர் கைப்பற்றினர். விழுப்புரம் அருகே திமுக கிளைச் செயலர் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த வேஷ்டி – சட்டைகளை வீட்டுக்குள் புகுந்து, சாலையில் எடுத்து வீசி பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் தலைமையில் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு எதிராக திமுகவினரும் திரண்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக புகார் அளித்தும், தேர்தல் அலுவலர்களும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகக் கூறி அவர்கள் முழக்கமிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.