டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ 125 கோடி கொடுக்கும் அதேவேளையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷ்மன் கெய்க்வாடுக்கு பிசிசிஐ உதவ வேண்டும் என்று மற்றொரு முன்னாள் வீரர் சந்தீப் பாட்டில் கூறியுள்ளார்.
“கடந்த சனிக்கிழமை அன்று மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை நழுவவிடாமல் பிடித்துக்கொண்டனர்.
இந்திய அணியின் இந்த ஆட்டம் சிறப்பான ஒன்றாக இருந்தது அவர்களுக்கு பிசிசிஐ அறிவித்திருக்கும் ஊக்கத்தொகை மிகவும் வரவேற்கத்தக்கது.
ஐபிஎல் தொடர் உலகக்கோப்பை போட்டி என்று தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றுவரும் வீரர்கள் அமெரிக்க மண்ணில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பிட்சுகளை கண்டு துவண்டுவிடாமல் தொடரின் அனைத்து போட்டியிலும் வென்று கோப்பையையும் கைப்பற்றியுள்ளது.
சிறப்பாக விளையாடிய அணிக்காக எந்தவொரு விளையாட்டு வாரியமும் செய்ய யோசிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.
அதேவேளையில், இந்திய அணிக்காக கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடிய நட்சத்திர வீரர் அன்ஷ்மன் கெய்க்வாடுக்கு பிசிசிஐ உதவ வேண்டும்” என்று சந்தீப் பாட்டில் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மே மாதம் லண்டன் சென்றபோது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அன்ஷ்மன் கெய்க்வாடை சந்தித்ததாகவும் அவர் தனது சிகிச்சைக்காக உதவி செய்ய பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார் என்று பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ பொருளாளர் ஆஷிஷ் ஷெல்லாரிடம் தானும் திலிப் வெங்சர்க்காரும் பேசியபோது மேலும் சில முன்னாள் வீரர்களும் இதேபோன்ற கோரிக்கை வைத்துள்ளதால் அன்ஷ்மன் கெய்க்வாடின் கோரிக்கையும் அதனுடன் சேர்த்து பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்ததாக சந்தீப் பாட்டில் கூறினார்.
தனது நண்பரும் சக வீரருமான அன்ஷ்மன் கெய்க்வாடின் அவசர தேவை கருதி அவரது மருத்துவ செலவுக்கு பிசிசிஐ உடனடியாக உதவ வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் சங்க தலைவர் ஜெய் ஷா-வை சந்தீப் பாட்டில் வலியுறுத்தியுள்ளார்.