சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகள்  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு  தலைமையிலபான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்ணுக்குட்டி என்பவர்  விற்பனை செய்த  கள்ளச்சாராயம் அருந்திய இரு நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பெண்கள் உட்பட 61 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேருக்கு கண்பார்வை முழுமையாக பறிபோய் உள்ளது. ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் வழக்குகளும் போடப்பட்டு உள்ளது.

ஆனால், அதை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்து வருவதுடன், சிபிசிஐடி  விசாரணை மற்றும் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இந்த கள்ளச்சாராய வழக்கில், இதுவரை   21 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்   கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரிழவு குறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. குஷ்பு தலைமையிலான தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் உள்று கள்ளக்குறிச்சி வருகை தந்தனர். முதலில், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில்   குஷ்பு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த காவலர்களிடம் அவர் கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தினார். மேலும் திரட்டப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீஸாரிடம் கேட்டறிந்தார். அவருடன் தேசிய மகளிர் ஆணைய குழு பணியாளர்கள் உடன் இருந்தனர்.