சென்னை
இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.
பிறகு 13 மற்றும் 14-ந் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரையும் இடம்பெற்றது. பிப்ரவரி 19 ஆம் தேதி 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் 20 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பிப்ரவரி 21 ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று 22 ஆம் தேதியுடன், தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று முடிந்தவுடன் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெறுவது வழக்கம் என்றாலும். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்ததால், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படவில்லை.
சபாநாயகர் அப்பாவு வருகிற 24-ந் தேதி சட்டசபை கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். ஆயினும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டதால், அதற்கு முன்பாக சட்டசபையை கூட்டி, துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது.
எனவே தமிழக சட்டசபை இன்று (வியாழக்கிழமை) கூடுகிறது. முதல் நாள் கூட்டத்தில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது., கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி மரணம் அடைந்த விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டு அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் கூட்டம் ஒத்திவைக்கப்பட உள்ளது.