சென்னை:  தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய இணை அமைச்சர்  எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழிசையை, மத்திய அமைச்சர் அமித்ஷா அழைத்து பேசிய விவகாரம் சர்ச்சையானது. இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து,  விமர்சனங்களுக்கு தமிழிசை விளக்கம் அளித்த முற்றுப்புள்ளி வைத்தார். இருந்தாலும்,  ஊடகங்கள் அவர்கள் விரும்பியவாறு பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையம் வந்த த மத்திய  மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சரான எல்.முருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர்,  “தூர்தர்ஷன் என்றால் அதிகாரப்பூர்வமான செய்தி என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதேபோல மற்ற செய்தி ஊடகங்களும் இருக்க வேண்டும். பிரேகிங் செய்திக்காக தவறான செய்தியை பரப்ப வேண்டாம். அப்படி பரப்பப்படும் செய்தி ஊடகங்கள்  மற்றும் செய்தியாளர்கள்  மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து பேசியவர், தமிழகத்தின் பிரதிநிதியாக செயல்பட எனக்கு, பிரதமர் மோடி வாய்ப்பு கொடுத்துள்ளார். 2047 ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா இருக்கும். அதில் பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பை மோடி அளித்துள்ளார். மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுவேன். முன்பை போல் தமிழகத்திற்கு பெரிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.