சென்னை:  தமிழ்நாடு முழுவதும், 2024 ஜூலையில்  புதிய சொத்து வழிகாட்டுதல் மதிப்புகள் அமலுக்கு வரும் என தமிழ்நாடு  அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் மதராஸ் உயர்நீதிமன்றத்தில் கூறினார்.  மக்களவை தேர்தல் முடிவடைந்துள்ளதால்,  அதற்கான செயல்முறைகள் துரிதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

சொத்து வழிகாட்டி மதிப்பு என்பது அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் பதிவுகளின்படி சொத்தின் மதிப்பிடப்பட்ட சந்தை மதிப்பாகும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே பத்திரப்பதிவு உள்பட பல்வேறு கட்டணங்களை உயர்த்திய நிலையில், தற்போது சொத்து வழிகாட்டு மதிப்பையும் உயர்த்தி உள்ளது. இதுதொடர்பாக ஜூன் 10ம் தேதி  தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் புதிய திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

 இந்த புதிய வழிகாட்டி மதிப்பு வரைவு பட்டியல் மீது பொதுமக்கள் கருத்து சொல்ல 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துக்களுக்கு பிறகு இறுதி பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. (பொதுமக்களின் கருத்துக்கேட்பு என்பது மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என்பது அனைவரும் அறிந்ததே)

தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள் கடந்த 2012ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. அதில் சில குளறுபடிகள் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்த காரணத்தால் கடந்த 2017ல், வழிகாட்டி மதிப்புகளை அப்போதைய அதிமுக அரசு  33 சதவீதம் குறைத்து அறிவித்தது. இது சொந்த வாங்குபவர்களுக்கு வசதியாக இருந்தது. ஆனால், திமுக அரசு பதவி ஏற்றதும், சொத்து விற்பனையாளர்கள் பயன்பெறும் வகையில், சொத்து வழிகாட்டு மதிப்பை உயர்த்துவதாக அறிவித்தது.

இதுர தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி,  ” 01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. மேலும், விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும்,   சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கோரிக்கைகளை ஏற்று, வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது. இக்குழு நிலஅளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும்வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகவும்,  இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்” என்று  கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது,  சொத்து வழிகாட்டி மதிப்பை உயர்த்த உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது, புதிய சொத்து வழிகாட்டு மதிப்பு ஜூலை மாதம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.