சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, Dr.அபிநயா என்பவர் அங்கு போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி ஏப்ரல் 6-ந் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதையடுத்து, ஜூலை 10ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இதையடுத்து, அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இன்று ( ஜூன் 14ஆம் தேதி) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பிர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதன்படி சித்தமருத்துவர் அபிநயா என்பவரை வேட்பாளராக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார். அவருக்கு கட்சியின் மண்டல, மாவட்ட, தொகுதி உள்பட அனைத்து பொறுப்பாளர்களும், பாசறைகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கான திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளார். மேலும் அதிமுக சார்பில் வேட்பாளர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.