இடாநகர்: அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், மாநில முதல்வராக பெமா காண்டு பதவி ஏற்றார். பெமா காண்டு 3வதுமுறையாக மாநில முதல்வராகி உள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மாநிலம், இட்டாநகரில் உள்ள டி.கே மாநில மாநாட்டு மையத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விழாவில் பெமா காண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருடன், பாஜகவின் சௌனா மெய்ன் இரண்டாவது முறையாக துணை முதல்வராக பதவியேற்றார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அருணாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 60 இடங்களில் 46 இடங்களை பாஜக வென்றது. தேர்தலுக்கு முன்பு பாஜக 10 இடங்களை போட்டியின்றி வென்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் என்பிபி 5 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களிலும், மக்கள் ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. மீதமுள்ள மூன்று இடங்களை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பெமா காண்டு, “எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், பழங்குடியினர் உட்பட அனைத்து குடிமக்களை யும் அனைத்து பிராந்தியங்களின் வளர்ச்சிக்கும் அழைத்துச் செல்கிறோம்” என்றும், “மக்களின் ஆதரவுடன், ஆத்மனிர்பர் அருணாச்சல பிரதேசத்தை ஒரு யதார்த்தமாக மாற்ற நாங்கள் இன்னும் கடினமாக உழைப்போம், இது விக்சித் பாரத்தை உருவாக்குவதற்கு துடிப்பான பங்களிப்பை வழங்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நிலையில், நேற்று (ஜுன் 12ந்தேதி) நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக முக்தோ தொகுதியில் போட்டியிட்டு வெற்றபெற்ற பெமா காண்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதையடத்து அவர் மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து, அருணாச்சலப் பிரதேச ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் கே.டி.பர்நாயக் (ஓய்வு) பெமா காண்டுவை ஆட்சி அமைக்க அழைத்தார்.
இதைத்தொடர்ந்து இன்று பதவி ஏற்பு விழா மாநில தலைநகர் இட்டாநகரில் உள்ள டி.கே மாநில மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில், பெமா காண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருடன், பாஜகவின் சௌனா மெய்ன் இரண்டாவது முறையாக துணை முதல்வராக பதவியேற்றார். இவர்களுக்கு மாநில கவர்னர் கே.டி. பர்நாயக் பதவி பிரமானம் செய்து வைத்தார்.
இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் பங்கேற்றனர்.
அருணாச்சல மாநில முதல்வர் பெமா காண்டு, கடந்த 2016 ம் ஆண்டு முதன்முறையாக மாநில முதல்வரானார். சில மாதங்களுக்குப் பிறகு, அவர், கிட்டத்தட்ட அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அருணாச்சல மக்கள் கட்சியில் சேர்ந்து மற்றொரு அரசாங்கத்தை அமைத்தார். இருப்பினும், 2016 டிசம்பரில், மக்கள் கூட்டணி காண்டுவை வெளியேற்றியது, அதைத் தொடர்ந்து அவர் பாஜகவில் இணைந்தார். மொத்தமுள்ள 60 இடங்களில் 41 இடங்களைக் கைப்பற்றி பாஜக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், 2019 மே 29 அன்று பாஜக தலைவராக இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தற்போது 3வதுமுறையாக மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.