சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 24ம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஜுன் 20ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
20224 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடந்தன. ஆனால், மக்களவை தேர்தல் காரணமாக மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் இன்றி, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிவடைந்து மத்தியில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றுள்ளதால், சட்டப்பேரவை மீண்டும் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த 7 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டப்பேரவை ஜூன் 24 ஆம் தேதி கூட்டி உள்ளதாகவும், எத்தனை நாள் கூட்டம் நடைபெறும் என்பது குறித்து அலுவல்ஆய்வு குழு கூடி முடிவு செய்யும் என்று அறிவித்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24 ஆம் தேதிக்கு பதில் ஜூன் 20 ஆம் தேதியே தொடங்கவுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் பேரவை முன்னதாகவே தொடங்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுள் தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வு கூட்டம் நாளை நடைபெற உள்ளதாகவும், அதுபோல, விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் நாளை (ஜூன் 12) காலை 11 மணிக்கு பதவியேற்கிறார் என்றும் கூறினார்.