நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வடஇந்திய மற்றும் மேற்கு இந்திய மாநிலங்களில் பாஜக கூட்டணியை மக்கள் நேரடியாக நிராகரித்துள்ளனர்.
கிழக்கில் கூட்டணி கட்சிகளின் தயவில் கரைசேர்ந்திருக்கும் நிலையில் தெற்கில் ஒரு சில மாநிலங்களில் வெற்றிபெற்றாலும் தமிழ்நாட்டில் மண்ணை கவ்வியது.
இப்படி நான்கு திசையிலும் பாஜக-வுக்கு சரமாரி குத்து விழுந்தபோதிலும் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றுள்ளது பாஜக.
பிரதமர் மோடிக்கும் ஆரம்பத்தில் வாரணாசி கியாரண்டி இல்லாத நிலையில் பின்னர் சுதாரித்து வெற்றிபெற்றுள்ளார். இதில் குறிப்பாக பாஜக-வைச் சேர்ந்த 15 அமைச்சர்கள் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மோடி 3.0 என்ற குறிக்கோளுடன் கூட்டணி கட்சிகளின் தயவை நாடியுள்ள பாஜக-வுக்கு அதன் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மக்களவை சபாநயாகர் மற்றும் 10 அமைச்சர் பதவிகளை கேட்பதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தளம் 3 கேபினட் மற்றும் 2 இணை அமைச்சர் பதவியும், ஷிண்டே தலைமையிலான சிவசேனா 1 கேபினட் மற்றும் 2 இணை அமைச்சர்கள் பதவி கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இவர்களைத் தொடர்ந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம்விலாஸ் பாஸ்வான் கட்சியினர் 1 கேபினட் மற்றும் 1 இணை அமைச்சர் பதவியும் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா 1 கேபினட் பதவியும் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆதிராவைச் சேர்ந்த பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி இதுவரை எந்த பதவியும் கேட்கவில்லை என்ற போதும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மோடி 3.0வுக்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பதை பாஜக உணர்த்தியுள்ள நிலையில், தங்களது கோரிக்கைகள் குறித்து முடிவு தெரிந்த பின் ஜூன் 7ம் தேதி கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து மோடி தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாப்பிள்ளை அவர் தான்…. ‘பிரதமர்’ மோடி தான் ஆனால் அதை 7ம் தேதி நாங்க சொல்வோம்… நாயுடு – நிதீஷ் கோரஸ்