தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் பாஜக தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

பாஜக தரப்பில் ஜெ.பி. நட்டா, மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதாதளம் கட்சித்தலைவர் நிதீஷ்குமார், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கூட்டத்தின் முடிவில் கூட்டணி தலைவர்களுடன் ஜனாதிபதி மாளிகை சென்று ஆட்சி அமைக்க உரிமைகோரப் போவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வரும் 7ம் தேதி டெல்லியில் மீண்டும் கூட்டம் நடைபெறும் என்றும் அந்தக் கூட்டத்தில் மோடி-யை கூட்டணி கட்சித் தலைவராக அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறிய சந்திரபாபு நாயுடு அதன் பிறகே ஜனாதிபதியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாப்பிள்ளை அவர் தான் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என்பது போல் நாயுடுவின் இந்த பதில் பாஜக தலைமையை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

ஆந்திர பிரதேச சட்டமன்றத்துக்குள் கூட நுழையமுடியாத எதிர்கட்சித் தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் முன் சிறையில் இருந்த நிலையில் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பாஜக ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தோளில் ஏறி சவாரி செய்தது கரை சேர்ந்தது.

அதேபோல், பீகாரிலும் நிதீஷ் குமார் முதுகில் ஏறி சவாரி செய்து வருகிறது.

இந்த நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களான சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமாரின் தயவு இல்லாமல் பாஜக-வால் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை எழுந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவை சபாநாயகர் மற்றும் நிதி உள்ளிட்ட முக்கிய இலக்காக்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாயுடுவைத் தொடர்ந்து நிதிஷ் குமாரும் பல்வேறு முக்கிய அமைச்சர் பொறுப்புகளை கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இவர்களைத் தொடர்ந்து ஷிண்டே, சிராக் பாஸ்வான் தவிர உதிரி கட்சிகளும் தங்கள் பங்கிற்கு அமைச்சர் பதவி கேட்டு நிர்பந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு மூன்று முறை பிரதமராக இருந்த நிலையில் அதனை சமன் செய்யும் வாய்ப்பு தற்போது மோடிக்கு கிடைத்திருப்பதை அடுத்து மோடி 2.0வை விட வீரியம் குறைவாக இருந்தாலும் என்ன விலை கொடுத்தாவது மோடி 3.0 அமைய வேண்டும் என்று மோடி உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கோரிக்கை என்ன என்பது குறித்து அவர்களுக்கு வழங்கப்படும் பதவிகளை வைத்து தெரிந்துகொள்ள முடியும் என்றபோதும் கூட்டணி பேச்சுவார்த்தையிலேயே இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் மோடி முன்பை போல் தன்னிச்சையாக இயங்கமுடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.